வனஜீவராசிகள் திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

வெருகல் பிரதேச செயலகப் பிரிவின் பெரும்பாலான பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை விடுவிக்குமாறு பிரதேச செயலாளரினால் இன்று (17) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு 32041.66 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டதாக காணப்படுகிறது. இதில் 25242.13 ஏக்கர் காணி 1970, 1986 ஆண்டு காலப்பகுதிகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 11 கிராம சேவகர் பிரிவில் 7 கிராம சேவகர் பிரிவுகள் முழுமையாகவும், 4 கிராம சேவகர் பிரிவுகள் பகுதியளவிலும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் இதில் மக்களுடைய விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த பகுதியின் உள்ளே 3526 காணி அனுமதிப் பத்திரங்களையும், 1002 அளிப்பு பத்திரங்களையும் வழங்கியிருப்பதாகவும் அளிப்பு பத்திரங்கள் வழங்குவதற்காக நில அளவை செய்கின்றபோது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது வன ஜீவராசிகளுக்குரிய காணி என்பதை நில அளவைத் திணைக்களம் குறிப்பிட்டிருக்கவில்லை.

வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் வர்த்தமானி அறிவித்தலுக்கு முன்பதாகவே மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இதில் 19643.59 ஏக்கர் நிலத்தை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும் இதுவரை எவ்வித பகுதியும் விடுவிக்கப்படவில்லை எனவும் இதனால் மக்களுக்கான காணி ஆவணங்களை வழங்க முடியாதுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன் 11906.35 ஏக்கர் காணிகள் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 3261.58 ஏக்கர் நிலத்தை விடுவிக்கக் கோரியும் 1001.52 ஏக்கர் நிலம் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது, காணிப் பிரச்சினைகளை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள காணி தொடர்பான துணைக்குழு கூட்டத்தில் பேசி முடிவு எட்டப்படும் என பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் விடுவிப்பு, தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணி, நாதனோடை அணைக்கட்டு, கல்லரிப்பு – பனிச்சங்குளம் கால்வாய், இலங்கைத்துறை, புன்னையடி, கல்லடி பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் படகுப்பாதை போக்குவரத்து முதலான 11 விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்த கலந்துரையாடலில் பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா, பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், பிரதேச செயலாளர் எம்.என்.எம்.அனஸ், உதவி பிரதேச செயலாளர் உட்பட அரச அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.