மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை, வீட்டு உரிமை கட்டாயம் பெற்றுக்கொடுக்கப்படும். இது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற, 545 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘காணி உரிமை என்பது எமக்குரிய சொத்து. எனவே, கிடைக்கப்பெற்றுள்ள காணி உரிமையை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது எமது பொறுப்பாகும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
மலையக மக்களுக்குரிய வீட்டுரிமை, காணி உரிமை என்பன 200 வருடங்களாக கனவாகவே இருந்துவருகின்றது. தேசிய வருமானத்துக்கு பங்களிப்பு செய்தும் இந்நிலைமையே காணப்பட்டது.
எமது மக்களின் காணி, வீட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். எமது ஆட்சியில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். மலையகத்தில் வாழும் சகலருக்கும் வீட்டுரிமை, காணி உரிமை என்பன பெற்றுக்கொடுக்கப்படும்.
காலை முதல் மாலைவரை வேலை செய்தாலும் சொற்பளவு சம்பளமே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது. அதனை வைத்து அன்றாட தேவையைக்கூட பூர்த்திசெய்துகொள்ள முடியவில்லை. எனவே, வரவு- செலவுத் திட்டத்தில் வேலைத்திட்டமொன்று செயல்படுத்தப்படும்.” – என்றார்.