பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் 10 000 வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்வதில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து அக்கறையுடன் செயற்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரமுகர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன், பழனி திகாம்பரம், பாரத் அருள்சாமி ஆகியோர் கடந்த வியாழனன்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை கொழும்பில் சந்தித்திருந்தனர்.
இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அரசியல்பிரிவின் இரண்டாவது செயலாளரான அஷோக் குமார் ராஜூவும் பங்கேற்றிருந்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரமுகர்களை உயர் ஸ்தானிகர் சந்தித்திருந்தார்.
இலங்கையில் இந்தியா முன்னெடுக்கும் மக்களை இலக்காகக் கொண்ட அபிவிருத்தி திட்டங்கள், குறிப்பாக பெருந்தோட்ட சமூகங்களுக்கு நன்மையளிக்கும் வகையிலான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்னணிடம் வினவிய போது, சமகால அரசியல் நிலைவரம், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் 10 000 வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்வதில் தாம் அக்கறையுடன் இருப்பதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். அதில் காணப்படும் காணி சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். மேலும் பல அரசியல் விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது என்றார்.