சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாக குற்றஞ்சாட்டிய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் அக்கட்சி பிளவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் திருத்தச் சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு பொன்னான வாய்ப்பு காணப்பட்டபோதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினரும் தங்களின் சொந்த அரசியல் காரணங்களுக்காகத் அதனைத் தவறவிட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதுடன் சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் இலங்கை தமிழரசுக் கட்சி பிளவடைந்துள்ளது.
மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் திருத்தச் சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு பொன்னான வாய்ப்பு காணப்பட்டபோதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினரும் தங்களின் சொந்த அரசியல் காரணங்களுக்காகத் அதனைத் தவறவிட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக்கட்சி பல்வேறு தருணங்களில் மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றியும் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்து பற்றியும் அதிகமாகப் பேசுகின்றது, ஆனால் செயற்பாட்டில் வேறுபட்ட நிகழ்ச்சி நிரலை அக்கட்சியினர் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் வெளிப்படுத்தப்படுகின்றது.
இந்த உண்மையை நான் சொன்னால், எனக்கு தமிழ் சினிமாத் திரைப்படங்களில் வரும் ‘வில்லன்’ போன்று முத்திரை குத்துகிறார்கள். ஆனால், தமிழ் மக்களின் உண்மையான வில்லன்கள் யார் என்பதை தமிழ் மக்கள் தற்போது புரிந்து கொண்டிருப்பார்கள்.
ரணிலுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். நான் தமிழ் மக்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை நம்பவைப்பதற்காக பொய்சொல்கிறார்.
மாகாண சபை முறைமைகள் விடயத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மீண்டும் தனது மக்களை தோல்வியடைய செய்துள்ளது. ரணில் மீண்டும் தமிழ் மக்களை முட்டாளாக்கியுள்ளார்.
இதேநேரம், இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் நீண்டகாலமான தலைமைக்கட்சி என்ற பாத்திரத்தினை இனி வகிக்க முடியாத நிலையை அடைந்துள்ளது.
அந்தக் கட்சியினர் சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளதான் காரணமாக உட்கட்சிப் பிளவு வலுவாகியுள்ளது. தமிழ் மக்களுக்கான ஏகோபித்த தலைமையை அந்தக் கட்சியினால் வழங்க முடியாத பரிதாமான நிலைமையை அடைந்துள்ளது என்று மேலும் தெரிவித்தார்.