நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளை அணுகுவதில் உள்ள பிரச்சினைகள், சிரமங்கள் தொடர்பாக விரைவாக முறைப்பாடளிக்க 1904 என்ற அவசர தொலைபேசி இலக்கம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் இந்த அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்சாரம், வைத்தியசாலை மற்றும் அவசர மருத்துவ சேவைகள், பொது போக்குவரத்து மற்றும் விநியோகங்கள், நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப சேவைகள், நீர்ப்பாசனம் மற்றும் பிற அத்தியாவசிய பொது சேவைகள் முதலியவற்றை அணுகுவதில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பாக புகாரளிக்க இந்த அவசர தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தலாம் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவசர நிலைகள் அல்லது சேவை இடையூறுகள் ஏற்பட்டால் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு சரியான நேரத்தில் பதிலளிப்பது, சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் திறமையான தீர்வினை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
1904 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வரும் அனைத்து அழைப்புகளும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தின் செயற்பாட்டு மையத்தின் ஊடாக பெறப்படுகின்றன.
அங்கு புகார்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பப்படும் என்று குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து குடிமக்களும் இந்த அவசர தொலைபேசி இலக்கத்தை பொறுப்புடன் பயன்படுத்தி, உடனடி தீர்வினை பெற்றுக்கொள்ள, துல்லியமான தகவல்களை வழங்குமாறு அலுவலகம் கேட்டுக்கொள்கிறது.





