நாட்டை மீள கட்டியெழுப்ப ஜனாதிபதி உடனடியாக செயற்பட்டு, சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி இரண்டு வாரங்களுக்குள் சர்வதேச நன்கொடையாளர் மாநாடொன்றை கொழும்பில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (05) இரண்டாவது நாளாக இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, வர்த்தக வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் தற்போது இடம்பெற்றுள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பையும் சுனாமி அனர்த்தத்தினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பையும் ஒப்பிட்டுபார்க்கும்போது, சுனாமியால் 1 பில்லியன் டொலருக்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் 6 முதல் 7 பில்லியன் டொலர் இழப்பு ஏற்படுள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியானால், இந்த அனர்த்தம் 6தடவை சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதற்கு சமமாகும். அத்துடன் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3முதல் 5 வீத இழப்பாகும்.
அதனால் இடம்பெற்றுள்ள இந்த அனர்த்தம் தொடர்பில் சர்வதேச நாடுகளின் அவதானம் இன்னும் இரண்டு வாரங்களில் வேறு பகுதிக்கு திருப்பிவிடும். அதனால் ஜனாதிபதி உடனடியாக செயற்பட்டு, சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி இரண்டு வாரங்களுக்குள் சர்வதேச நன்கொடையாளர் மாநாடொன்றை கொழும்பில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக ஜனாதிபதி விஜயம் மேற்கொண்ட இந்தியா, ஜப்பான், ஜேர்மன், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகள் மற்றும் கட்டார், சவூதி அரேபியா நாட்டு தலைவர்களுடன் தொடர்புகொண்டு, சர்வதேச நன்கொடை மாநாடொன்றை நடத்தி, 2,3பில்லியன் டொலர்களை தேடிக்கொள்ள வேண்டி இருக்கிறது. அதற்கானதொரு முயற்சியை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று எமது ஓய்வுபெற்ற தலைவர்களான ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ், சந்திரிக்கா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன போன்ற அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு, ஏற்பட்டுள்ள இந்த தேசிய அனர்த்தம் தொடர்பில் கலந்துரையாட வேண்டும். கட்சித் தலைவர் என்றவகையில் இந்த கோரிக்கையை ஜனாதிபதிக்கு முன்வைக்கிறேன். அவர்களுக்கு வழக்கு தொடுப்பது தொடர்பில் எங்களுக்கு பிரச்சினையில்லை. அது அவ்வாறு இடம்பெறட்டும். அதற்கு மத்தியில் இந்த அனர்த்தத்தில் இருந்து மீள நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் எமக்கு தேவையான இந்த பாரிய நிதியை தேடிக்கொள்ள முடியாது.
அவ்வாறு இல்லாவிட்டால், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி, நாங்கள் கடன் மீள செலுத்தும் காலத்தை 3 வருடங்களுக்காவது ஒத்திவைப்பதற்கு அவர்களுடன் கலந்துரையாட முடியும்.அதனால் இந்த இரண்டு மாற்று வழிகளில் ஒன்றை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இடம்பெற்ற வெள்ள அனர்த்த்தில் கம்பொளை, மல்வானை, வெல்லம்பிட்டி, மூதுர், கின்னியா, கொலன்னாவை உள்ளிட்ட பல நகரங்கள் முற்றாக நீரில் மூழ்கி அனைத்தும் இழக்கப்பட்டுள்ளன. விசேடமாக கண்டி மாவட்டம் பாரிய சேதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதனால் கண்டி மாவட்டத்தை மீள கட்டியெழுப்ப விசேட வேலைத்திட்டத்தை நாங்கள் தயாரித்திருக்கிறோம்.அக்குரணை ரம்புக்வெல பகுதியில் ஏற்பட்ட மணிசரிவில் 29பேர் வரை உயிரிழந்துள்ளனர். 11 சடலங்களே மீட்கப்பட்டிருக்கின்றன.அதேபோன்று அங்கு பல பகுதிகள் முற்றாக மண்சரிவில் புதையுண்டு அழிந்துள்ளன.
அதனால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களுக்கு விரைவாக வீடுகள் அமமைத்துக்கொடுக்க வேண்டி இருக்கின்றன. அதற்கு அரச காணிகள் இனம்கண்டு, அந்த காணிகளுக்கு கட்டிட ஆராச்சிய நிறுவனத்தின் சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள கட்டிட ஆராச்சி நிறுவனத்தில் போதுமான அதிகாரிகள் இல்லை. அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். எமது பல்கலைக்கழகங்களில் இருக்கும் பொறியியல் பீட பொயியலாளர்களையும் இந்த பணியில் இணைத்துக்கொண்டு, இதனை மேற்கொள்ள வேண்டும்.அவ்வாறு இல்லாமல் இதனை செய்ய முடியாது.
கண்டி தெல்தோட்டையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும் பெருமளவிலான வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. என்றாலும் தற்போது சில மக்கள் போவதற்கு இடமில்லாமல் அங்கு இருக்கிறார்கள். அதனால் இந்த மக்களுக்கு மாற்றுத் தீர்வை பெற்றுக்கொடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



