03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி மணிக்கு இலங்கை வானிலை தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா முக்கிய விழிப்பூட்டும் முன்னறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நாளை 04.12.2025 அன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு , மத்திய மாகாணங்களில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
எதிர்வரும் 05.12.2025 அன்று கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அன்றைய தினம்( 05.12.2025) வடக்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 06 மற்றும் 07 ம் திகதிகளில் நாடு முழுவதும் பல இடங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மன்னார், அனுராதபுரம், புத்தளம், சிலாபம், கண்டி, நுவரெலியா, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, களுத்துறை, காலி,பதுளை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 08.12.2025 அன்று வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் பதுளை மாவட்டத்திற்கும் சற்று கனமழை கிடைக்கும் என்பதோடு வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும்.
எதிர்வரும் 09.12.2025 திகதி நாடு முழுவதும் மிதமானது முதல் கனமான மழை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. 10.12.2025 அன்று நாடு முழுவதும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இது வடகீழ்ப் பருவக்காற்று காலம் என்பதனால் அவ்வப்பொழுது இலங்கையில் பல இடங்களிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புக் காணப்படுகின்றது.
ஆயினும் ஒரு தீவிரமான வானிலை நிகழ்வுக்குரிய எந்த வாய்ப்பும் அடுத்து வரும் 07 நாட்களுக்கு இல்லை என்பதனால் மக்கள் மழை கிடைத்தாலும் அச்சம் கொள்ள தேவையில்லை.
ஆனால் ஏற்கெனவே புயலினால் மிகக்கனமழை கிடைத்து, ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து, குளங்கள் வான் பாய்ந்து மண் ஈரலிப்பாக உள்ள நுவரெலியா, கண்டி, பதுளை, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு சற்று கனமான மழை கிடைத்தாலே (குறைந்தது 30-40 மி.மீ. கிடைத்தால் கூட) அது நிலச்சரிவைத் தூண்டும் என்பதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக எதிர்வரும் 6,7,8,9 ம் திகதிகளில் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ணமாகாண மக்கள் அவதானமாக இருப்பது அவசியம். மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் அனர்த்த மீட்பு பணிகளில் ஈடுபடுவோரும் இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.
சாத்தியமான அனர்த்தம் ஒன்றை கருத்தில் கொண்டு நாம் தயாராக இருந்தால், அந்த அனர்த்தம் நிகழாவிட்டாலும் எமக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தயராக இல்லாது விட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.





