‘எமது நிதி முகாமைத்துவம் சட்டத்துக்கு அமைவானது’ – நிதி பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ!

அரச  நிதி முகாமைத்துவத்து சட்டத்துக்கு  அமைவாகவே  நிதி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட நிதியம் குறித்தும் எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள். இந்த நிதியத்துக்குரிய சட்ட அங்கீகாரம் வெகுவிரைவில் பெற்றுக்கொள்ளப்படும். அனர்த்தத்துக்கு பின்னர் அரசாங்கம் ஏதும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சியினர் தான் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். எமது செயற்பாட்டை சர்வதேசம் வரவேற்றுள்ளது என  நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில்  பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (05) வெள்ளிக்கிழமை  நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின்  பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு,  வர்த்தகம் மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய  அமைச்சுகளுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாடு என்ற அடிப்படையில் மிக மோசமான இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்டோம். பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்பை ஒருபோதும் மதிப்பிட முடியாது. சேதமடைந்த சொத்துக்களை இன்றளவில் மதிப்பிட முடியாத நிலை உள்ளது. இழப்புக்களை மதிப்பிட்டால் தான் புனரமைப்புக்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க முடியும்.

அனர்த்தத்தை தடுக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை, அனர்த்தத்தின் பின்னர் அரசாங்கம் முறையாக செயற்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். அது அவர்களின் அரசியல் செயற்பாடாகும். அனர்த்தத்தின் பின்னர் அரசாங்கம் செயற்பட்ட விதத்தை  உலக நாடுகள் வரவேற்றுள்ளன. நாட்டு மக்கள் உண்மையை அறிவார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமிப்பதற்கு போதுமான நிதியை ஜனாதிபதி விடுவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கி இதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக நிவாரண நிதி வழங்க உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து நாட்டு மக்களை வெகுவிரைவில் மீட்போம்.

பொருளாதாரப்  பாதிப்பில் இருந்து மீட்சிப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் தான் இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுக்க வேண்டியது. சிறந்த பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை இருந்திருந்தால் சர்வதேசத்திடம் நிதி மற்றும் இதர ஒத்துழைப்புக்களை கோர வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.

அரச  நிதி முகாமைத்துவத்து சட்டத்துக்கு  அமைவாகவே  நிதி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட நிதியம் குறித்தும் எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள். இந்த நிதியத்துக்குரிய சட்ட அங்கீகாரம் வெகுவிரைவில் பெற்றுக்கொள்ளப்படும். நெருக்கடியான நிலையில் அரசாங்கம் அரச நிதி முகாமைத்துவ சட்டத்துக்கு அமைவாகவே செயற்படுகிறோம்.

பொருளாதார மீட்சிக்குரிய நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது. 2025  நவம்பர் மாதம் நடுப்பகுதியில் நாட்டின் மொத்த அரச கடன் பெறுமதி  30.6 ரில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் தேசியக் கடன்  19480 பில்லியன் ரூபா, வெளிநாட்டுக் கடன் 36.23 பில்லியன் டொலர் உள்ளடங்குகிறது. 2026 ஆம் ஆண்டு முதல் அரச கடன்களை மீள் செலுத்துவதற்குரிய திட்டங்கள் செயற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.