திருக்கோயில் கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர், ஆசிரியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசத்துக்குட்பட்ட, திருக்கோயில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள் அண்மைக்காலமாக வெளிநபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்குச் சிறிலங்கா பொலிஸாரோ, அரசாங்கமோ ஆக்கபூர்வமான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதன் பின்னணி பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  
2025.05.23 ஆம் திகதியன்று திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட ஆலயடி வேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியரும் வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.  திருக்கோவில் கல்வி வலயத்தினால் நடத்தப்பட்ட மேலதிக செயலமர்விற்கு தொடர்ச்சியாகச் சமுகளித்திராத மாணவியொருவரின் வரவை உறுதிப்படுத்துவதற்காகப் பாடசாலை அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய மாணவர் இடைவிலகலைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கட்டாய வரவு குழுவுக்குப் பொறுப்பான ஆசிரியர் மாணவியின் வீட்டுக்குத் தேடிச் சென்ற போது குறித்த மாணவியின் மைத்துனரால் குறித்த ஆசிரியர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிபர் மீதும் குறித்த நபரால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டு, அதிபரின் மோட்டார்ச் சைக்கிளும் பாரிய சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.

மேலும் 2025.10.01 ஆம் திகதியன்று  கல்முனை திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட  அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரியின் பிரதி அதிபர் முகமூடி அணிந்த இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். நவராத்திரி விழாவின் ஒரு அங்கமாக கும்ப ஊர்வலம் சென்ற மாணவிகளை அசௌகரியப்படுத்தும் வகையில் பெண் பிள்ளைகளை நெருங்கிப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கச் சில இளைஞர்கள் முற்பட்டுள்ளனர். குறித்த இளைஞர்கள் தங்களைப் புகைப்படம் எடுப்பதைத் தடுக்குமாறு மாணவிகள் விடுத்த வேண்டுகோளுக்கமைய புகைப்படம், வீடியோ எடுக்க முயன்ற இளைஞர்களைத் தடுத்திருந்த பிரதி அதிபரின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதி அதிபரின் வீடுதேடிச் சென்ற முகமூடி அணிந்த இனந்தெரியாத நபர்கள் அவரை இரும்புக் கம்பிகளால் தாக்கியுள்ளனர்.

நாட்டில் குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்காக துபாயிலும், இந்தோனேசியாவிலும் வைத்துப் பாதாள உலகக் குழுக்களைக் கைது செய்துள்ளதாகப் பிரசாரம் செய்துவரும் அரசாங்கம் சிறிலங்காவில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாமல் இருப்பது கவலைக்குரியதாகும்.

அரசாங்கம் தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை வெளியிட்டுள்ளது. இக் கொள்கை இலங்கையில் காணப்படும் சமூகவியல் பின்னணிகளைக் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டதா? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது. மாணவர்களுக்கு அதிபர், ஆசிரியர்களால்  வழங்கப்படும் உளரீதியான தண்டனைகளுக்குக் கூடச் சிறைத் தண்டனைகளையும், அபராதங்களையும் விதிக்கும் சட்டமூலத் திருத்தங்களை மேற்கொண்டுள்ள அரசாங்கம் பாடசாலை மாணவர்களையும் அதிபர், ஆசிரியர்களையும் பாதுக்காக்கத் தவறும் சிறிலங்கா பொலிஸாருக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய புதிய சட்ட மூலங்களை உருவாக்கத் தவறியுள்ளது.

மாணவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத சுதந்திரத்தை வழங்கும் சட்டமூலங்களை அரசாங்கம் உருவாக்குவதற்கு முன்னர் கட்டுக்கடங்காத சுதந்திரத்தை மாணவர்களுக்கு வழங்கும் குறித்த சட்டமூலங்களைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திச் சமூகச் சீரழிவுகளில் ஈடுபடும் நபர்களால் அதிபர், ஆசிரியர், மாணவர்கள் மற்றும் சமூகம் பாதிக்கப்படும் விடயங்களுக்கும் தீர்வு வழங்க முன்வரவேண்டும்.

திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட பிரதேசங்களில் அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக நடைபெற்ற காட்டுமிராண்டி தனமான சம்பவங்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. குறித்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் குற்றவாளிகளைக் கைது செய்வதுடன் மட்டும் நின்றுவிடாமல் சமூக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றோம் என்றுள்ளது.