மியன்மாரிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் சிறிலங்காவை வந்தடைந்த விமானம்

இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மார் அரசாங்கம் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் இன்று (7) நாட்டை வந்தடைந்தன.

மியன்மார் விமானப்படையின் Y-8 ரக விமானம் நிவாரணப் பொருட்களுடன் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இறங்கியது.

விமானத்தில் அனுப்பப்பட்ட பொருட்களில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் அவசர கால நிவாரண உபகரணங்கள் முதலியவை உள்ளடங்குகின்றன.

இந்த நிவாரணப் பொருட்களை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வில் மியன்மாருக்கான இலங்கைத் தூதர் மார்லர் தான் ஹ்தைக், மியன்மார் வெளியுறவு அமைச்சகத்தின் பணிப்பாளர் ஜெனரல் சாவ் பியோ வின், மியன்மார் அரசாங்க பிரதிநிதிகள் குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் இலங்கை சார்பில் விமானப்படையின் திட்டமிடல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் தேசப்ரிய சில்வா உள்ளிட்ட விமானப்படை உயர் அதிகாரிகள் பங்கேற்று நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொண்டனர்.

இது டித்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கும் ஆதரவின் மேலும் ஒரு முக்கிய பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.