படுகை அணையை கட்டாததால் வீணாக கடலில் கலக்கும் மழைநீர்

உடைந்து 4 ஆண்டுகளாகியும் புதிதாக செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணையை கட்ட அரசு நடவடிக்கை எடுக்காததால் கனமழை பொழிந்தும் தேக்கி வைக்க முடியாமல் மழைநீர் கடலில் சேர்வது தங்களுக்கு கண்ணீரை வரவழைப்பதாக கிராம விவசாயிகள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் செல்லிப்பட்டு – பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கடந்த 1906-ம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது. பழமையான இந்த படுகை அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் சுற்றுவட்டாரப் பகுதியில் 30 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.

போதிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2011-ம் ஆண்டு பெய்த மழையால் படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அணை உடையும் அபாயம் ஏற்பட்டதால் கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அணையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அணை பராமரிக்கப்படாததால் 2021-ம் ஆண்டு நவம்பரில் பெய்த கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அணையின் பெரும்பகுதி முற்றிலும் உடைந்து போனது. இதனால் பல்லாயிரம் கனஅடி நீர் வெளியேறி வீணாக கடலில் சென்று சேர்ந்தது.

 

 

 

 

 

 

 

 

அணை உடைந்த பகுதி அருகே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே நபார்டு வங்கி உதவியுடன் சுமார் ரூ.20.40 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்ட அரசு முடிவு செய்தது. ஆனால் இதுவரை செய்யவில்லை. இந்த நிலையில் புதுச்சேரியில் பொழிந்த கனமழையால் கிராம பகுதிகளில் அதிக மழை அளவு பதிவானது.இதனால் நீர் நிலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

ஆனால் செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணை முற்றிலும் உடைந்துள்ளதால் மழை நீர் தேங்காமல் கடலுக்கு சென்று கொண்டு இருக்கிறது.மழைநீர் கடலுக்கு செல்வதை வேதனையுடன் விவசாயிகள் பார்த்தனர். இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “படுகை அணை உடைந்து 4 ஆண்டுகளாகியும் புதிய அணை கட்டும் பணி துவங்கப்படவில்லை. தண்ணீரை சேமிக்க முடியவில்லை. கோடையில் தண்ணீர் இதனால் கிடைப்பதில்லை. எளிதில் கிடைத்த நிலத்தடி நீர் தற்போது 40 அடிக்கு கீழே போய்விட்டது. இந்த அணையை கட்டித்தந்தால் புண்ணியமாக இருக்கும்.” என்கின்றனர்.