மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்கு தனி சட்டம் – தனிநபர் மசோதா அறிமுகம்

நாடு முழுவதும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான தனி சட்டத்தை ஏற்படுத்துவதற்கான தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு நேற்று அறிமுகம் செய்தார்.

‘மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை சட்டம்-2025’ என்ற தலைப்பில் அவர் அறிமுகம் செய்த தனிநபர் மசோதாவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் நான்கில் ஒருவர் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகிறார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 2040-ம் ஆண்டு வாக்கில் மார்பகப் புற்றுநோயால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை 64 சதவீதம் உயரும் ஆபத்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 2023-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 2.12 லட்சம் பெண்கள் மார்கப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், 20 முதல் 30 வயது வரையிலான பெண்களிடையே இந்நோய்க்கான அறிகுறிகள் தோன்றி 50 முதல் 65 வயது வரைக்குள்ளாக அதன் தீவிரத்தன்மையை அடைகிறது. இந்த ஆண்டில் அக்டோபர் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 2,52,108 பெண்கள் இந்நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததும், சுய பரிசோதனை செய்துகொள்வதில் உள்ள தயக்கம் காரணமாகவும் நோய் முற்றிய நிலையிலேயே பாதிப்பு பற்றி தெரிகிறது. இதனால் சரியான சிகிச்சையை உரிய நேரத்தில் பெற முடியாமல் போகிறது.

இந்த சட்டம் நிறைவேறுவதன் மூலம் மார்பகப் புற்றுநோயிலிருந்து இந்திய இளம்பெண்களைப் பாதுகாக்கும் வகையில், மத்திய – மாநில அரசுகள் இணைந்து, இலவசப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யலாம். மருத்துவ முகாம்கள் நடத்தி இலவசமாக மருந்துகளை வழங்கலாம். மேமோகிராபி போன்ற சோதனைகளை அனைத்துத் தரப்பு பெண்களும் இலவசமாகப் பெற வழி ஏற்படும்.

இன்னொரு அம்சமாக மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளை தொடக்கத்திலேயே தெரிந்துகொள்ளும் வகையில் நாடு தழுவிய விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும். இந்த மசோதா, சட்டமாக நிறைவேறினால், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அவ்வப்போது போதிய நிதியை வழங்கி மேற்சொன்ன மருத்துவ முகாம் ஏற்பாடுகள் மற்றும் இலவச சிகிச்சைகள் அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த விபரங்கள் அடங்கிய மசோதாவை மாநிலங்களவையின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக கனிமொழி என்.வி.என்.சோமு தாக்கல் செய்தார். இதுதவிர, மக்கள் தொகை கட்டுப்படுத்துவது, சட்டவிரோத குழந்தைகள் தடுப்பு தொடர்பாக தனித்தனி மசோதாக்களையும் அவர் அறிமுகம் செய்தார்.