நியூசிலாந்தில் மலையேற்ற வீரர்கள் இருவர் உயிரிழப்பு

அவோராகி அல்லது மவுண்ட் குக் என அழைக்கப்படும் நியூசிலாந்தின் மிக உயரமான மலையில் இருந்து விழுந்து இரண்டு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

3,724 மீட்டர் உயரமுள்ள மலையில் ஏறிய நான்கு பேரில் இருவர் உயிரிழந்தனர். திங்கட்கிழமை இரவு  அவசர சேவைகளைத் தொடர்பு கொண்ட பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஹெலிகாப்டர் மூலம் மற்றைய இருவரும்  காயங்கள் ஏற்படாமல்  மீட்கப்பட்டனர்.

பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, உயிரிழந்த மலை வீரர்களின் சடலங்கள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன. சடலங்கள் மீட்கும் பணி தற்போது “கடினமான ஆல்பைன் சூழலில்” நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தின் தென் தீவு வரை நீண்டு இருக்கும் தெற்கு ஆல்ப்ஸின் மீது உயர்ந்து நிற்கும் மவுண்ட் குக்கி மலையின் சிகரத்தை அடைவது பெரிய பிளவுகள் மற்றும் கணிக்க முடியாத வானிலை காரணமாக அனுபவம் வாய்ந்த மசையேற்ற வீரர்களுக்கு கூட கடினமான விடயமாகும்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் நன்கு அறியப்பட்ட, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மலையேற்ற வழிகாட்டி என நியூசிலாந்து ஊடக நிறுவனமான ஸ்டஃப் செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த மூன்று மலையேற்ற வீரர்கள் மலையில் காணாமல் போனார்கள். பல நாள் தேடலுக்குப் பின்னரே அவர்கள் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு சீரற்ற வானிலையே காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மவுண்ட் குக் மலைச் சிகரத்திற்கு செல்ல முயன்ற பலர் உயிரிழந்துள்ளனர். ஒரு மலையேற்றப் பருவம் குறைந்தது ஒரு உயிரிழப்பு கூட நிகழாமல் கடந்து செல்வதில்லை என நியூசிலாந்து ஆல்பைன் கிளப் க்ளைம்ப்என்இசட் தெரிவித்துள்ளது.