அனோஜன் விவகாரத்தில் சர்வதேசத்தின் தலையீடும் அவசியம்
Ad Space
Ad Space
அறியாமையில் அல்லது தவறுதலாக சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவினை செய்தமைக்காக மரண தண்டனை வழங்குவதென்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். சவுதி சட்டத்தில் அவ்வாறான ஏற்பாடுகள் காணப்படலாம். ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் ஒரு வெளிநாட்டு பிரஜை என்பதால் சர்வதேச மனித உரிமை சட்டங்கள், ஏற்பாடுகள் குறித்தும் சவுதி அவதானம் செலுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை இளைஞனான சிவராஜா அனோஜன் விவகாரம் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,குறித்த இளைஞன் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டமைக்காக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மிகவும் பாரதூரமானதும் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் நேரடியாக இராஜதந்திர ரீதியில் தலையிட வேண்டும். ஜனாதிபதி அல்லது வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் இவ்விடயம் அணுகப்பட வேண்டும்.சவுதியில் இவ்வாறான சட்டங்கள் நடைமுறையிலிருக்கலாம். அது அந்நாட்டு பிரஜைகளுக்கு பொறுந்தலாம். ஆனால் இந்த விவகாரம் முற்றிலும் மாறுபட்டது. இதில் தொடர்புபட்டுள்ளவர் ஒரு வெளிநாட்டு பிரஜையாவார். எனவே சர்வதேச மனித உரிமை சட்டங்கள், ஏற்பாடுகள் குறித்தும் சவுதி அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அது சர்வதேசத்தின் மத்தியில் தவறானதொரு முன்னுதாரணமாகிவிடும். மத நிந்தனை என்பது நியாயப்படுத்தக் கூடியதோ அல்லது அங்கீகரிக்கப்படக் கூடியதோ அல்ல. எவ்வாறிருப்பினும் இந்த விவகாரம் மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட வேண்டியதாகும். இது குறித்து அரசாங்கம் துரிதமாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
Ad Space
Ad Space