பேரிடரில் இருந்து மக்களை   பாதுகாப்பதற்காகவே  அவசரகால  சட்டத்தை அமுல்படுத்த  இணக்கம்  தெரிவித்தோம். அவசரகால சட்டத்தை பயன்படுத்தி  ஊடகங்களை ஒடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில்  வட்டகல பொலிஸாருக்கு  அறிவுறுத்தியுள்ளார் என சர்வஜன அதிகாரம்  கட்சியின்   பாராளுமன்ற உறுப்பினர்  திலித்  ஜயவீர எம்.பி. தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற  பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்  2025.11.28 ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பேரிடரை எதிர்கொள்ள கொண்டுவந்த அவசரகால சட்டத்தின் விதிகளை மேலும் கடுமையாக்கி அதனை நீடிக்க அரசாங்கம்  முயற்சிக்கின்றது. இந்த அவசரகால சட்டம் முன்னர்  பல தடவைகள் தவறுதலாக பயன்படுத்தப்பட்டதை நாம் ஏற்கின்றோம்.இந்த சட்டத்தினால் தாம் அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறுவோர்தான் இப்போது அந்த சட்டத்தின் விதிகளை மேலும் கடுமையாக்கி அதனை நீடிக்க முயற்சிக்கின்றனர்.

அனர்த்தங்களால் ஏற்பட்ட  நெருக்கடிகளில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கும், புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் மாத்திரமே  அவசரகால சட்டத்தை அமுல்படுத்த இணக்கம் தெரிவித்தோம். ஆனால் இந்த சட்டம் தற்போது  தவறாக  பயன்படுத்தப்படுகிறது. இந்த அவசரகால சட்டத்தை பயன்படுத்தி  ஊடகங்களை ஒடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல  பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறான நிலையில் எவ்வாறு இந்த அவசரகால சட்ட விதிகளை எம்மால்  ஆதரிக்க  முடியும் என்றார்.