அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக வரி விகிதத்தை இலங்கை அரசாங்கம் பேணி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். இது இலங்கையின் ஆடைத் தொழில்துறையை பாரிய பின்னடைவுக்கு உள்ளாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வரிக் குறைப்பை பங்களாதேஷ் 19 சதவீதமாகவும், இந்தியா 18 சதவீதமாகவும் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இலங்கை மாத்திரம் எந்தவித சலுகைகளுமின்றி இன்னும் 20 சதவீத வரி விகிதத்திலேயே நீடிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
'அமெரிக்காவுக்கான நமது ஏற்றுமதியில் 70 சதவீதம் ஆடைகளாக இருக்கும் நிலையில், இந்த 20 சதவீத வரி விகிதமானது ஏனைய நாடுகளின் உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைத் தயாரிப்புகளின் போட்டித்தன்மையை கணிசமாகக் குறைக்கும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்திலேயே மிக உயர்ந்த வரி விகிதத்தைக் கொண்டிருப்பதன் விளைவுகளை அரசாங்கம் உணராமல் இருப்பதாகவும், ஆடைத் துறைக்கான எந்தவொரு சலுகைகளையும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தவறிவிட்டதாகவும் சஜித் பிரேமதாச இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக வரி விகிதத்தை பேணும் அரசாங்கம் - சஜித்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space