ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு பிரதான அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்கும் நோக்கில், சஜித் பிரேமதாச மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையில் கொழும்பு கிளப்பில் மிக இரகசியமான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
எவ்வித வெளிப்புறத் தலையீடுகளுமின்றி பல மணிநேரம் நீடித்த இந்த கலந்துரையாடலில், சஜித் பிரேமதாச தனது கடந்தகால கசப்பான அனுபவங்களை மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வெளிப்படுத்தியுள்ளார்.
நவீன் திசாநாயக்க, ருவன் விஜேவர்தன மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகிய மூவரிடமும் முன்கூட்டியே ஆலோசித்த பின்னரே சஜித் பிரேமதாச இந்தச் சந்திப்பிற்குச் சம்மதித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது ரணில் விக்ரமசிங்கவுடனான தனது உறவு குறித்துப் பேசிய சஜித், 'ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட தருணத்தில், நான் சிங்கப்பூரில் இருந்த போதிலும் பழைய விடயங்களை மறந்து அவருக்கு ஆதரவாக நிற்குமாறு எனது கட்சியினருக்கு கூறினேன்.
அவர் மருத்துவமனையில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் சென்று பார்த்தேன். ஆனால், அதற்கு பின்னர் இடம்பெற்ற சில விடயங்கள் வேதனையளிக்கிறது. இரு கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டியது இலட்சக்கணக்கான ஆதரவாளர்களின் விருப்பம் என்பதை ஏற்றுக்கொண்ட சஜித், அதற்கு ரணில் விக்ரமசிங்க 'ஆலோசனை' மட்டத்தில் மாத்திரமே இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தற்போது இரு கட்சிகளிலும் நாட்டை வழிநடத்தக்கூடிய திறமையான இளைய தலைவர்கள் இருப்பதாகவும், அவர்களே தற்போதைய தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான நிகழ்ச்சி நிரலை முதலில் தயாரிப்பதே முறையான அணுகுமுறை என அவர் இதன்போது முன்மொழிந்துள்ளார். இறுதியில், சஜித் மற்றும் ரணில் ஆகிய இரு தலைவர்களுக்கும் இடையில் நேரடிச் சந்திப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என சாகல ரத்நாயக்க முன்வைத்த யோசனையை சஜித் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டார்.
எனினும், அத்தகைய உயர்மட்டச் சந்திப்பிற்கு இது தகுந்த நேரமல்ல என்றும், முதலில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வகையிலான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச நிபந்தனை விதித்துள்ளார். இப்போதைக்கு தேர்தல் நெருக்கடி இல்லாததால், நிதானமாக ஒரு பொது இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே சஜித்தின் நிலைப்பாடாக இருந்தது.
இணையும் பாதையில் ரணில் - சஜித் கொழும்பில் இடம்பெற்ற இரகசியப் பேச்சுவார்த்தை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space