இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையின் வசம் உள்ள ஈரானிய மாலுமிகளை மீண்டும் ஈரான் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கையைக் கோரியுள்ளது.இலங்கை விளையாட்டு

அண்மையில் இலங்கைக்கு அப்பால் உள்ள சர்வதேசக் கடற்பரப்பில் ஈரானுக்குச் சொந்தமான 'ஐரிஸ் டெனா' என்ற போர்க்கப்பல் மூழ்கியது.

அதிலிருந்து மீட்கப்பட்ட மாலுமிகள் மற்றும் தற்போது இலங்கையின் பொறுப்பில் உள்ள 'ஐரிஸ் புஷெர்' என்ற மற்றொரு ஈரானியக் கப்பலின் பணியாளர்கள் ஆகியோரை மீண்டும் ஈரானுக்கு அனுப்பக் கூடாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இலங்கை அதிகாரிகளுக்கு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த மாலுமிகளை ஈரான் தனது பிரசார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், அவர்களைத் திருப்பி அனுப்பும் விடயத்தில் இலங்கை மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மார்ச் 06 ஆம் திகதியிடப்பட்ட அமெரிக்காவின் உள்நாட்டுத் தகவல் பரிமாற்றக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் நிலவி வரும் கடும் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மாலுமிகள் விவகாரம் தற்போது சர்வதேச அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது

இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் அல்லது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.