உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு
Ad Space
Ad Space
எரிவாயு கட்டண அதிகரிப்புக்கு அமைய உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்களின் சங்கம் தீர்மானிதுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அரசாங்கம் ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது தடவையாகவும் எரிவாயு கட்டணத்தை அதிகரித்திருக்கிறது. அதனால் விலை அதிகரிப்புக்கு அமைய சிற்றுண்டிச்சாலை உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். சிறியதொரு தொகை அதிகரிக்கப்பட்டால் அதுதொடர்பில் ஆராய்ந்து நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். என்றாலும் லிட்ரோ காஸ் 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் லாப் எரிவாயு 1070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
எனவே விலை அதிகரிப்புக்கமைய சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவகங்களின் உணவுப்பொருட்களின் விலை சிறியளவில் அதிகரிப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அதன் பிரகாரம் ரைஸ் என்ட் கறி, கொத்து ரொட்டி 20 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம்.
அதேநேரம் விலை குறைக்கப்பட்டால் உடனடியாக உணவுப்பொருட்களின் விலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதன் பிரகாரம் தற்போது சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை சற்று குறைவடைந்துள்ளது. அதனால் ஷாேட்டீஸ் வகைகளின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறேம்.
உணவகங்களில் கீறி சம்பா அரிசியே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கீறிசம்பா அரிசியின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அதற்கு மாற்றமாக வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தீர்மானித்திருக்கிறது. அவ்வாறு குறைந்த விலைக்கு அரிசி கிடைக்கப்பெறுமாக இருந்தால், நிச்சயமாக நாங்கள் றைஸ் போன்ற உணவு வகைகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்ற உத்தரவாதத்தை நுகர்வோருக்கு வழங்குகிறோம் என்றார்.
Ad Space
Ad Space