இந்திய உயர்ஸ்தானிகராலயம் மூலமாக வெளிவிவகார அமைச்சுக்கு நிலத்தடி, கனிம வளங்கள் தொடர்பான ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் முதலீடுகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்வதற்கான புதிய ஒப்பந்தமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்படும் எந்தவொரு தகவலையும் இந்தியாவின் எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி வெளியிட முடியாது என்பது குறித்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஆபத்தான விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
குருணாகலில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் இந்தியாவுடன் இரகசியமான பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கனிம வள ஆய்வு ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது. குறிப்பாக கனிம வள ஆய்வு தொடர்பான ஒப்பந்தத்தில், இரு நாடுகளின் அனுமதியின்றி தகவல்களை வெளியிட முடியாது என்ற நிபந்தனை வெளிப்படைத்தன்மையற்றது.
ஜே.வி.பி ஒரு அரசியல் கட்சியாக தீவிரமான இந்திய எதிர்ப்பு கொள்கையை முன்னெடுத்தது. அதன் விளைவாக 1988-89 காலப்பகுதியில் நாட்டில் பெரும் கலவரங்கள் ஏற்பட்டன.
இதனால் இந்திய அமைதி காக்கும் படையினர் பலர் உயிரிழந்தனர். அப்போது இந்திய எதிர்ப்பு அரசியலால் நாட்டின் மின்சார விநியோகக் கட்டமைப்பு மற்றும் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்தியாவை கடுமையாக எதிர்த்தவர்கள் இன்று ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டுக்குத் தெரியாமல் இந்தியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அவை குறித்த விவரங்கள் பாராளுமன்றத்திற்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ இதுவரையிலும் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் மூலமாக வெளிவிவகார அமைச்சுக்கு புதிய ஒப்பந்தமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இது இலங்கையின் நிலத்தடி மற்றும் கனிம வளங்கள் தொடர்பான ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் முதலீடுகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்வதற்கான ஒப்பந்தமாகும்.
குறித்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஆபத்தான அம்சம் என்னவென்றால், இந்த ஆய்வுகள் மூலம் கண்டறியப்படும் எந்தவொரு தகவலையும் இந்தியாவின் எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி வெளியிட முடியாது என்பதாகும். இது நாட்டின் இறையாண்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது.
இலங்கையின் கடற்பரப்பில் உள்ள கோபால்ட் (Cobalt) படிவுகள், இரும்புத் தாது, பாஸ்பேட் மற்றும் மட்டக்களப்பு பகுதியில் உள்ள கனிம வளங்கள் ஆகியவற்றை இந்தியாவுடன் இணைந்து அகழ்வதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. ஜே.வி.பி யின் முக்கிய தலைவர்கள் இந்தியாவுக்குச் சென்று வந்ததன் பின்னரே இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
முன்னர் இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தவர்கள், இன்று இந்திய அரசாங்கம் எதைச் சொன்னாலும் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
கனிம வள ஆய்வு குறித்து இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு புதிய ஒப்பந்த முன்மொழிவு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space