பால் பவுடரில் நச்சுப்பொருள்
நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்புகளான SMA, BBA, மற்றும் NAN உட்பட பல பால் பாவுடர் தயாரிப்புகள், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்வீடன், ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் இத்தாலி உட்பட 60 நாடுகளில் திரும்பப் பெறப்படுவதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதாவது, செயற்கையாக தயாரிக்கப்படும் பால் பவுடரில் கலக்கப்படும் ARA என்னும் உட்பொருளில் செருலைட் என்னும் நச்சுப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே அந்த தயாரிப்புகள் திரும்பப் பெறப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்தது.செயற்கையாக தயாரிக்கப்படும் பால் பவுடர்கள், தாய்ப்பாலை ஒத்திருக்கவேண்டும் என்பதற்காக, arachidonic acid (ARA) oil என்னும் ஒரு அத்தியாவசிய கொழுப்பு அமிலம் (essential fatty acid) பால் பவுடரில் கலக்கப்படுகிறது. பால் பவுடரில் கலக்கப்படும் இந்த ARA எண்ணெயில், செருலைட் (cereulide) என்னும் நச்சுப்பொருள் இருப்பது, வழக்கமான சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செருலைட் என்பது, பேசில்லஸ் சிரியஸ் (Bacillus cereus) என்னும் பாக்டீரியாவால் உருவாக்கப்படும் ஒரு நச்சுப்பொருளாகும்.
முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த நச்சுப்பொருளை சூடாக்கினாலும் அது அழியாது (heat-stable toxin). அதாவது, கொதிக்கும் நீருடன் கலந்தாலும் இந்த நச்சு அழியாது. பால் பவுடர் தயாரிக்கும்போது, அதை பதப்படுத்தினாலும் (pasteurisation) அந்த நச்சு அழியாது என்பது ஒரு முக்கியப் பிரச்சினை.
இந்த செருலைட் கலந்த பாலை அருந்தினால், குழந்தைகளுக்கு தொடர்ச்சியான வாந்தி, வயிற்றுப்போக்கு, கடும் சோர்வு முதலான பல பிரச்சினைகள் ஏற்படும்.