கைவினைப் பொருட்களின் புத்தாக்கம் குறித்து ஆளுநர் பெருமிதம்
Ad Space
Ad Space
நாங்கள் கற்பனையில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு உங்கள் கைவினைப் பொருட்களைப் புத்தாக்கமாக வடிவமைத்துள்ளீர்கள். இவ்வாறான புத்தாக்க சிந்தனையாளர்கள் எமது வடக்கு மாகாணத்தில் இருப்பதையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய கைவினைக் கலைகளையும், கைவினைஞர்களின் ஆற்றல்களையும் வெளிக்கொணர்ந்து, அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழா – 2026 வெள்ளிக்கிழமை (18) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதரகம் மற்றும் புடவைக் கைத்தொழில் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.கண்காட்சியைப் பார்வையிட்ட ஆளுநர், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல்வேறு கைவினைப் பொருட்களை நேரில் பார்வையிட்டதுடன், அவற்றை உருவாக்கிய கைவினைஞர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் படைப்பாக்க முயற்சிகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.தமது பிரதம விருந்தினர் உரையில் மேலும் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்தில் தான் இதற்கு முன்னரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த கண்காட்சிகளைப் பார்வையிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஒவ்வொரு முறையும் எமது மக்கள் புத்தாக்க சிந்தனையுடன் வித்தியாசமான முறையில் பொருட்களை உருவாக்கிக் காட்சிப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பக் கூறுவதாலும், ஒரே முறையில் மீண்டும் மீண்டும் செயற்படுவதாலும் சலிப்பு ஏற்படக்கூடும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், ஆனால் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள கைவினைப் பொருட்கள் ஒவ்வொன்றும் பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் புத்தாக்கச் சிந்தனையுடனும் தனித்துவத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.'இவ்வளவு திறமையான கைவினைஞர்களும் புத்தாக்க சிந்தனையாளர்களும் எமது வடக்கு மாகாணத்தில் இருப்பதையிட்டு நான் பெருமிதம் கொள்கின்றேன்' எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.இன்று நடைபெறும் இந்த நிகழ்வு வெறும் கண்காட்சியாக மட்டும் அமையவில்லை எனத் தெரிவித்த அவர், கைவினைப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் தளமாகவும், புதிய தொடர்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பாகவும், பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும் நிகழ்வாகவும் இது அமைகின்றது எனக் குறிப்பிட்டார்.தேசிய மற்றும் மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வடக்கு மாகாண மக்களின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்த ஆளுநர், அவர்களின் திறமைகள் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இவ்வாறான பாரம்பரிய கைவினைப் பொருட்கள் சுற்றுலாவிகளை ஈர்க்கக்கூடியவையாக உள்ளன எனத் தெரிவித்தார். கைவினைஞர்கள் தமது பொருட்களை சுற்றுலாவிகளிடம் சந்தைப்படுத்துவதற்கான உரிய வாய்ப்புகளை வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இன்றைய கண்காட்சியைப் பார்வையிட்டபோது, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி தம்மிடம் சுட்டிக்காட்டிய விடயமொன்றையும் ஆளுநர் குறிப்பிட்டார்.கைவினைஞர்கள் தமது மனித உழைப்பை முதலீடு செய்து மிகவும் சிறப்பாகக் கைவினைப் பொருட்களை உருவாக்கியுள்ள போதிலும், அவற்றின் விலைகள் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார்.எனவே, தமது மனித உழைப்புக்கும் படைப்பாற்றலுக்கும் உரிய பெறுமதியை உணர்ந்து, கைவினைப் பொருட்களுக்கு உரிய உயர்ந்த விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் ஆளுநர் கைவினைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், பாரம்பரிய முறையில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை மற்றும் சிறப்புரைகள் இடம்பெற்றதுடன், பண்பாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கைவினைத்துறையில் சிறப்பாகப் பங்களித்தவர்கள் கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் தானுஜா முருகேசன், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் எழிழரசி அன்ரன் யோகநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
Ad Space
Ad Space