கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 3545 பரீட்சை நிலையங்களும், 531 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை 451 463 பேர் பரீட்சைக்கு தோற்றுவதற்காக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

மேலும் விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளுக்கு பிரத்தியே பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்காக 3545 பரீட்சை நிலையங்களும், 531 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும், 33 பிரதேச ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைகளுக்காக பாடசாலை ஊடாக 382 249 பரீட்சாத்திகளும், தனிப்பட்ட ரீதியில் 69 214 பரீட்சாத்திகளும் விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டுமொத்தமாக 451 463 பரீட்சாத்திகள் விண்ணப்பித்துள்ளனர்.

முப்படை மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடி பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளும் தயார்நிலையிலுள்ளன. சகல விண்ணப்பதாரர்களுக்கும் பரீட்சை அனுமதி அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்கான நேர அட்டவணை அனுமதி அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சாத்திகளை கேட்டுக் கொள்கின்றோம்.

கடந்த ஆண்டுகளை விட இம்முறை நேர அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 5, 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் நேர அட்டவணை கடந்த ஆண்டுகளை விட வித்தியாசமான முறையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. காலையில் 8.30 மணிக்கும், பகல் 1 மணிக்கும் பரீட்சைகள் ஆரம்பமாகும். எனவே பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு 1 மணித்தியாலத்துக்கு முன்னரே பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கையடக்க தொலைபேசி, நவீன கைக்கடிகாரம் உள்ளிட்ட எவ்வித இலத்திரனியல் உபகரணங்களும் பரீட்சை நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முடியும். இவை இல்லாதவர்கள் தமது இரு புகைப்படங்களை அதிபர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் உறுதிப்படுத்தி அதனை தற்காலிய அடையாள அட்டையாகப் பயன்படுத்த முடியும்.

விசேட தேவையுடைய பரீட்சாத்திகளுக்காக இரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம், மஹரகம புற்று நோய் வைத்தியசாலை, கைதடி நவீல் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலை என்பவற்றில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளிலுள்ள பரீட்சாத்திகளுக்காக  வட்டரொக்க சுனீத வித்தியாலயத்தில் விசேட பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.