சட்டத்தை அறிந்தவர்கள் தான் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்பதை அறிவார்கள். நான் ஏதேனும் தவறு செய்தால் நீதிமன்றம் செல்லலாம். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அவ்வாறே ஏற்று நடப்பதற்கு தான் தயாராக உள்ளதாக சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க தெரிவித்தார்.
தன்னைப் பதவியிலிருந்து விலகுமாறு விடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வருகை தந்த சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பின் உறுப்பினர்களுடன் உரையாடிய போதே சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, அந்த அமைப்பினர் சட்டமா அதிபருக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தும் கடிதம் ஒன்றைக் கையளித்தனர். அங்கு கருத்துத் தெரிவித்த சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, சட்டத்தை அறிந்தவர்கள் தான் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்பதை அறிவார்கள் எனக் குறிப்பிட்டார்.
'நான் ஏதேனும் தவறு செய்தால், அதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உள்ளன. தயவுசெய்து அங்கு செல்லுங்கள். நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்தாலும் அதனை அவ்வாறே ஏற்று நடக்க நான் தயாராக உள்ளேன். அதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்.' என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில், சமூக ஊடகங்கள் வாயிலாக உங்களுக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் எதிராகத் திட்டமிட்ட முறையில் அவதூறான மற்றும் விரோதமான கருத்துக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படுவதை சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு அவதானித்துள்ளது. இவ்வாறான பொய்யான மற்றும் வேண்டுமென்றே சிதைக்கப்பட்ட தகவல்களைப் பொதுமக்கள் மத்தியில் பரப்பி, வெறுப்பை உருவாக்குவதும் சமூக மரியாதையைச் சிதைப்பதும் இவர்களின் பழக்கமாக உள்ளது.
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குழு ஒன்றும், உள்நாட்டு யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களும் இந்தச் செயற்பாட்டில் தீவிரமாகப் பங்களித்து வருவதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. சில தனிநபர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சிதைத்து, அதனை அரசியல் அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயற்சிப்பதுத் தெரிகிறது.
ஒரு விசாரணை அதிகாரிக்கும் ஒரு வழக்கறிஞருக்கும் இடையிலான பணி வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் முன்னெடுக்கப்படும் இத்தகைய பிரசாரங்கள், உங்களது கண்ணியத்துக்கு மட்டுமல்லாமல் திணைக்களத்தின் பக்கச்சார்பற்ற தன்மைக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளன என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இக்குழுவினர் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் நீதிபதிகள் மற்றும் நீதிச் சேவை உறுப்பினர்கள் மீதும் இவ்வாறான அழுத்தங்களைப் பிரயோகிக்க முயற்சித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் எப்போதும் எந்தவொரு செல்வாக்கிற்கும் பணியாமல் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் செயற்பட்டு வருகின்றது என்பதையும், அது மக்கள் விருப்பத்தைப் பின்பற்றாமல் ஆதாரங்களையும் சட்ட நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்பதையும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
நீங்கள் உங்களது கடமைகளைத் தடையின்றி சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு எமது அமைப்பு முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குகிறது என்றும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை அறிந்தவர்கள் நான் சட்டத்துக்கு மேலானவன் அல்ல என்பதை அறிவார்கள் - சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க
Ad Space
Ad Space
Ad Space
Ad Space