தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மதுரையில் காலமானார். அவருக்கு வயது 90.அவரது உடல், மதுரை ஆரப்பாளையம் அடுத்துள்ள ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.நாளை பிற்பகல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு சாலமன் பாப்பையா பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.மதுரை அரசரடியில் உள்ள ஞானஒளிவுபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சாலமன் பாப்பையா, தனியார் தொலைக்காட்சியின் பட்டிமன்றங்களில் நடுவராகப் பொறுப்பேற்று பேசி வந்தார். அவரது பேச்சுக்குப் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.பட்டிமன்றங்கள் மற்றும் பொது மேடைகளில் நகைச்சுவை கலந்து சாலமன் பாப்பையா பேசி வந்தார். அவரது பேச்சுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்படப் பல நாடுகளில் பட்டிமன்றங்களை நடத்தி வந்துள்ளார்.தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் சாலமன் பாப்பையா பெற்றுள்ளார். கடந்த 5ஆம் தேதி சிவகாசியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய பட்டிமன்றத்தில் பங்கேற்றுப் பேசியுள்ளார்.