முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்ட வேளையில், அதற்கு எதிராகத் தாம் வலுவாகக் குரல் எழுப்பியதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அரசின் எந்தவொரு அங்கத்தின் ஊடாகவும் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அதற்கு எதிராகப் போராடும் கடப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பல்வேறு வாத, பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கும் பின்னணியில், இதுகுறித்து சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியிருப்பதாவது:எமது நாட்டில் நீதித்துறையின் சுதந்திரம் பற்றிய கரிசனை மீண்டுமொரு தடவை எழுந்துள்ளது. ஆட்சிபீடத்தில் உள்ள அரசாங்கங்கள், அரசின் ஏனைய இரு அங்கங்களான நிர்வாகத்துறை மற்றும் சட்டவாக்கத்துறை என்பவற்றின் நடவடிக்கைகள் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்வதற்கு அடிக்கடி முயற்சித்து வந்திருக்கின்றன. முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையும் அவ்வாறானதொரு நிகழ்வுதான். தற்போது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் நாம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தும்போது, சிரானி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்ய முற்பட்ட வேளையில் நாம் என்ன செய்தோம் என்று சிலர் கேட்கிறார்கள். நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அக்காலத்திலேயே நீதிமன்றத்தின் ஊடாகவும் பாராளுமன்றத்திலும் நாம் எவ்வளவு போராடினோம் என்பதை ஒருவேளை அவர்கள் மறந்திருக்கக்கூடும்.இன்று இவ்விடயத்தில் முதலைக்கண்ணீர் வடிப்பவர்களில் சிலர், அன்றைய காலகட்டத்தில் அந்தப் பாதிப்பை ஏற்படுத்தியவர்களாவர். இவை அனைத்துக்கும் அப்பால், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் நாம் கொண்டிருக்கும் கடப்பாடு தொடரும். ஏனெனில் அதுவே இந்நாட்டின் அரசியலமைப்பில் நிலைபெற்றிருக்கும் அடிப்படைத் தத்துவமாகும்.இவ்வாறானதொரு பின்னணியில் அரசின் எந்த அங்கத்திலிருந்தும் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சகல சந்தர்ப்பங்களிலும், அதற்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.