அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் பெப்ரவரி 02ஆம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 26ஆம் திகதி முழு வைத்தியசாலை அமைப்பையும் உள்ளடக்கி தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.

இதன்போது, கடந்த 26ஆம் திகதி கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு, அவர்களின் பிரச்சினைகளுக்கு நேர்மறையான தீர்வைக்கொண்டுவந்து அதை அறிவிக்க சுகாதார அமைச்சிக்கு 48 மணிநேர அவகாசம் வழங்க தீர்மானித்தது.

இருப்பினும், சுகாதார அமைச்சு, அதற்கான தீர்வினை வழங்காததால், எதிர்வரும் 02ஆம் திகதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தீவிரப்படுத்தவும், அதைத் தொடரவும் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இது தொடர்பாக சங்கத்தின் நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் இன்று சனிக்கிழமை (31) காலை நடைபெற்றது.

வைத்தியசாலையில் கிடைக்காத மருந்துகள் மற்றும் உபகரணங்களைப் பெறுவதற்காக நோயாளர்களுக்கு மருந்துச் சீட்டுகளை வழங்குவதை நிறுத்தி வைத்தல், வைத்தியசாலையில் கிடைக்காத ஆய்வக சோதனைகளை நடத்துவதற்காக நோயாளர்களுக்கு மருந்துச் சீட்டுகளை வழங்குவதை நிறுத்தி வைத்தல், அரசியல் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார முகாம்கள் மற்றும் வைத்தியசாலைகளில் தன்னார்வ பங்கேற்பிலிருந்து விலகுதல், அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை இல்லாமல் வைத்தியசாலை அமைப்பில் திறக்கப்பட்ட புதிய வைத்தியசாலை வார்டுகள் மற்றும் பிரிவுகளுக்கு வைத்தியர்களை நியமிப்பதை நிறுத்தி வைத்தல், உள்ளிட்ட நடவடிக்கைகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் செயல்படுத்த தீர்மானித்துள்ளது.