சென்னை மாநகராட்சியில் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் திமுக அரசு விஞ்ஞானப்பூர்வமாக ஊழல்களைச் செய்து வருகிறது. என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் கட்டுமான பணிகளுக்கு இ-டெண்டர்களை தாக்கல் செய்யும் ஒப்பந்ததாரர்கள், அத்துடன் கள ஆய்வு சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற புதிய முறையை கடந்த 2 ஆண்டுகளாக மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
மாநகராட்சி செயற்பொறியாளர் வழங்கும் கள ஆய்வுச் சான்றிதழ் அனைவருக்கும் கிடைத்து விடாது. மாநகராட்சி ஒப்பந்தத்தில் யாரெல்லாம் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆட்சி தலைமை விரும்புகிறதோ, அவர்களுக்கு மட்டும்தான் இச்சான்று வழங்கப்படும்.
இந்த சான்றிதழை பதிவேற்றாத நிறுவனங்கள் தொழில்நுட்ப தகுதி சுற்றில் வெளியேற்றப்படும். அதன்பின் தங்களுக்கு ஆதரவான நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களை வழங்கும். இதுதான் திமுகவின் நவீன விஞ்ஞான ஊழல் முறையாகும்.
ஊழலை ஒழிப்பதற்காக இ-டெண்டர் போன்ற வெளிப்படைத்தன்மை நடைமுறைகள் கொண்டு வரப்பட்டாலும் அதிலும் ஊழலுக்கான வழிமுறைகள் புகுத்துவதுதான் திமுகவின் வழக்கம் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை, பணி நியமன ஊழல் என திமுக ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடிக்கும் கூடுதலாக ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்தின் பிடியிலிருந்து வேண்டுமானால் திமுகவினர் தப்பிக்கலாம். ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் அளிக்கும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தங்கள் வழங்குவதில் திமுக அரசு விஞ்ஞானப்பூர்வமாக ஊழல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space