பிரபல 'டிக்டொக்' செயலியின் தாய் நிறுவனமான 'பைட்டான்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் ஜாங் யிமிங் , இந்தியப் பணக்காரர் கெளதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார்.ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் சுட்டெண் தரவுகளின்படி, இவரது சொத்து மதிப்பு 105 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.ப்ளூம்பெர்க் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவரது சொத்துக்களைக் கண்காணிக்கத் தொடங்கியபோது 13 பில்லியன் டொலராக இருந்த சொத்து மதிப்பு, தற்போது 8 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.பைட்டான்ஸ் நிறுவனத்தின் சர்வதேச மதிப்பீடு உயர்ந்துள்ளமைக்கும், அந்நிறுவனத்தின் 'தௌபாவ்' சாட்பாட் மற்றும் 'சீடான்ஸ்' வீடியோ உருவாக்கும் கருவி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் வரவேற்புமே இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.அமெரிக்காவில் 'டிக்டொக்' செயலி கடுமையான சட்டப் பரிசீலனைகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட போதிலும், ஜாங் யிமிங் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவுத் துறையில் முதலீடுகளை மேற்கொண்டு வந்தார்.அண்மையில், டிக்டொக்கின் அமெரிக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பைட்டான்ஸ் மாற்றியமைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவில் செயலியின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை தணிந்துள்ளது. சீனாவில் ஏற்கனவே முதலிடத்திலிருந்த ஜாங் யிமிங், தற்போது ஆசிய அளவிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.