டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலத்திற்குப் பாலியல் வன்புணர்வு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அங்கு பணிபுரியும் மூன்று சிற்றுழியர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி யுவதியின் பெற்றோர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (06) மாலை யுவதியின் பெற்றோர்களினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்;
"எனது பிள்ளையின் சடலத்திற்கு வைத்தியசாலையில் ஏதோ ஒரு விபரீதம் நடந்துள்ளது. இது தொடர்பாக வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெரா (CCTV) காட்சிகளை முழுமையாக எமக்குக் காண்பிக்கவில்லை. ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு முன்னால் வைத்தியர் தெரிவித்த கருத்துகளை நாங்கள் நேரில் பார்க்கவில்லை.
எமக்குக் காண்பிக்கப்பட்ட காட்சிகளில், குறித்த மூன்று ஊழியர்களும் பிரேத அறைக்குச் சென்று வரும் காட்சிகள் வெறும் 59 செக்கன்கள் மாத்திரமே உள்ளன. இவ்வளவு குறுகிய நேரத்திற்குள் ஒன்றும் நடந்திருக்காது என வைத்தியர் எமக்குக் கூறினார். இது தொடர்பாக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்களிடமும் வைத்தியர் தெரிவித்த கருத்துகள் வேறாக உள்ளன. யுவதியின் உடல் மீது தமக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் கூறியிருக்கிறார். அவ்வாறு அவர் கூறுவதற்கான காரணம் என்ன? நள்ளிரவு நேரத்தில் அந்த மூன்று ஊழியர்களும் எதற்காகப் பிரேத அறைக்குச் செல்ல வேண்டும்? அங்கு அவர்கள் செல்ல வேண்டிய எந்தத் தேவையுமில்லை. எனவே, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பொலிஸாரிடம் கோரியுள்ளோம்.
நாங்கள் வைத்தியசாலைத் தரப்பிடம் பணம் பெற்றுக்கொண்டு அமைதியாக இருப்பதாக மக்கள் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். பிள்ளையை இழந்து தவிக்கும் எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. காண்பிக்கப்பட்ட காணொளிக் காட்சிகளினால் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம்" என அவர் மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்தார்.
டிக்கோயா பிணவறைச் சம்பவம்: மூன்று ஊழியர்களுக்கு எதிராகப் பெற்றோர் காவல் துறையில் முறைப்பாடு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space