டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவரின் சடலத்திற்குப் பாலியல் வன்புணர்வு அல்லது முறையற்ற செயல்கள் இழைக்கப்பட்டிருந்தால், அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (06) குறித்த சம்பவம் தொடர்பில் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கள விஜயமொன்றை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
"இந்தச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் மத்திய மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு, விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திச் சிலர் அரசியல் இலாபம் தேடவும், இனவாதத்தைத் தூண்டவும் முயற்சி செய்கின்றனர்.
உண்மை நிலை அறியாது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவும் முனைகின்றனர். எனினும், பொலிஸார் ஊடாகச் சந்தேகநபர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படும்.
வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதனை உறுதிப்படுத்துவது வைத்தியசாலை நிர்வாகத்தின் பொறுப்பாகும். பிரேத அறையானது கட்டாயமாகப் பூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இச்சம்பவத்தின் போது அது பூட்டப்பட்டிருந்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அத்துடன், சடலங்கள் முறையாகக் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு அதுவும் இடம்பெறவில்லை. இவ்வாறான குறைபாடுகள் குறித்து ஏற்கனவே உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளோம்.
சம்பவம் நடந்த இரவு வேளையில் பிணவறைக்குள் நுழைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று ஊழியர்கள் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அறிவியல் ரீதியான மற்றும் பொலிஸ் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வைத்தியசாலைக் கட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைய விடமாட்டோம். குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தராதரம் பாராது கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்" என்றார்.
டிக்கோயா பிணவறையில் சடலத்திற்கு நேர்ந்த அவமரியாதை: குற்றவாளிகளுக்குத் தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space