தங்காலை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் இடவசதி இன்மையால், சடலங்கள் மீது ஐஸ் கட்டி இடப்பட்டு தள்ளுவண்டிகளில் “ட்ரொலிகளில்” வைத்தியசாலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசமக்களும் வைத்திசாலை தரப்பும் விசனம் வெளியிட்டுள்ளன.

பெலியத்தை, வீரக்கெட்டிய மற்றும் அங்குணகொலபெலஸ்ஸ உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து பிரேதப் பரிசோதனைக்காகச் சடலங்கள் குறித்த வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்றன.

எனினும், கடந்த நான்கு வருடங்களாக இங்கு போதிய குளிரூட்டி வசதிகள் இல்லாமை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

பழைய பிரேத அறையில் ஆறு சடலங்களைப் பேணக்கூடிய குளிரூட்டி முழுமையாகச் செயலிழந்துள்ள நிலையில், புதிய பிரிவில் இரண்டு சடலங்களை மாத்திரமே வைக்க முடியும்.

நேற்று வியாழக்கிழமை (12) பிரேத அறையில் சடலங்களால் நிரம்பியதால், இடமில்லாத நிலையில் மூன்று சடலங்கள் வைத்தியசாலையின் வளாகத்திலும், மற்றுமொரு சடலம் குளிரூட்டிக்கு வெளியேயும் வைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் உறவினர்களே தமது செலவில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு வந்து சடலங்களைப் பேண வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நீண்டகாலமாகச் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லை என வைத்தியசாலை ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.