கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்கும்.நீதிமன்ற விடயத்தில் எம்மால் தலையிட முடியாது. சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு அதிகபட்ச தண்டப்பணம் அறவிடப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.தண்டப்பணம் குறித்து அமைச்சு மட்டத்தில் கவனம் செலுத்தப்படும்.
தமிழக இழுவைப்படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் ஒருபோதும் அனுமதியில்லை
Ad Space
Ad Space
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்துள்ளோம்.இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் மே மாதம் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளேன்.இந்திய மீனவர்களின் இழுவை படகு மீன்பிடிக்கு இலங்கை கடற்பரப்பில் ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்று சனிக்கிழமை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவிழாவில் கலந்துக் கொண்ட இந்திய நாட்டுப்படகு மீனவர் சங்கம் மற்றும் தமிழக கடல்சார் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
அத்துடன் மஹஜர் ஒன்றையும் அமைச்சரிடம் கையளித்தனர். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர், இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுக் காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம்.ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இரு தரப்பு மீனவர் பிரச்சினை குறித்து கலந்துரையாடியுள்ளார்கள்.
மீனவர் பிரச்சினைக்கு கட்டம் கட்டமாக தீர்வு காணப்படும்.எதிர்வரும் மே மாதத்துக்கு பின்னர் இந்தியா தமிழகத்துக்கு செல்லவுள்ளேன்.இதன்போது இந்த பிரச்சினையுடன் தொடர்புடைய சகல தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளோம்.தேவையாயின் இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளோம்.
இந்திய மீனவர்களின் இழுவை படகு பயன்பாட்டால் இலங்கையின் மீன் மற்றும் கடல்வாழ் வளங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுகிறது. கடல்வளங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.ஆகவே இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இழுவை படகை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.
Ad Space
Ad Space