தலவாக்கலை சென்.கிளயர் நீர்விழ்ச்சி வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ளது . இதனால் ஒரு சுற்றுலா தலமும் தீயினால் சேதமடைந்துள்ளது. தீ மிகுந்த முயற்சியுடன் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை (08) மதியம் தலவாக்கலை சென்.கிளயர் வனப்பகுதியில் நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஏற்பட்ட தீ வனப்பகுதி முழுவதும் பரவி வருவதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

நிலவும் வறண்ட காலநிலையுடன், கவனக்குறைவான மனித நடவடிக்கைகளினால் தலவாக்கலை சென்.கிளயர் வனப்பகுதியில் தொடர்ந்து காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வனப்பகுதியில் காணப்பட்ட ஒரு சுற்றுலா தலமும் தீயினால் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. மேலும் சுற்றுலா தலங்களுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி கம்பிகள் மற்றும் மின்சார கம்பிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

எனினும் தீயினால்  வனப்பகுதில் கட்டப்பட்டிருந்த ஒரு குளவி கூடு களைந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு வந்தவர்களை தாக்கியதாகவும் இதனால் தீயை கட்டுப்படுத்துவதற்கு சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பரவிய தீ, ஹட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்புத் பிரிவினர், திம்புல பத்தனை காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் கொட்டகலை இராணுவ முகாமின் தீயணைப்புப் படையினரின் இணைந்து நீண்ட நேரம் போராட்டத்துக்கு மத்தியில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீயினால் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது எனவும் தெரிவிக்கின்றன

மலையகத்ததில் தொடரும் வரட்சியான காலநிலையால் காடுகளுக்கு தீ வைக்கும் விஷமச் செயல் அதிகரித்துள்ளது, தீ வைக்கும் செயல் இடம்பெற்று வருவதால் நீரேந்து பகுதிகளில் நீர் வற்றி காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.