ஒருவன் தனது தாய், மனைவி மற்றும் சகோதரியை எந்தளவுக்கு நேசிக்கிறானோ, அந்தளவுக்குத் தாய்நாட்டையும் நேசிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மாத்தளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகளிர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எந்தவொரு சவாலையும் - அது பொருளாதாரமாகவோ, சமூகமாகவோ அல்லது அரசியலாகவோ இருந்தாலும் - முதலில் எதிர்கொள்பவர்கள் பெண்களே. யுத்த காலத்தில் தாய்மார்கள் அளவற்ற துயரங்களைச் சுமந்தனர். தத்தமது பிள்ளைகளை யுத்த களத்திற்கு அனுப்பி அவர்கள் செய்த அர்ப்பணிப்பாலேயே இன்று நாம் அச்சமின்றி வாழும் சுதந்திரம் கிடைத்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும் போது அதன் பாதிப்பை முதலில் உணருவது இல்லத்தரசிகளே. தற்போதைய அரசின் வரிக் கொள்கை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பவற்றால் அநேகமான பெண்கள் பெரும் சுமையைச் சுமக்க வேண்டியுள்ளது. எமது கலாசாரம் மற்றும் மதப் பின்னணியில் சுயமாகத் தீர்மானம் எடுக்கக்கூடிய பலமான பெண்களை உருவாக்குவதே எமது இலக்காகும்.
கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் கொரோனா மற்றும் போராட்டக் காலங்களில் மக்கள் உயிரைப் பாதுகாக்கவே முன்னுரிமை அளித்தது. அந்தத் தீர்மானங்களால் அரசாங்கம் வீழ்ந்தாலும், நாடு பாதுகாக்கப்பட்டது. தற்போது மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலமான சக்தியாக மகளிர் அமைப்பு திகழ்கிறது. உள்ளூராட்சி மன்றங்களைப் போலவே பாராளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க எமது கட்சி தலைமைத்துவம் வழங்கும். தகுதியுள்ளவர்களுக்கு உரிய இடத்தைப் பெற்றுக்கொடுக்கும் அரசியல் சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
தமது தாய், தந்தை மற்றும் மனைவியை மதிக்கத் தெரியாத ஒரு சமூகத்தினால் நாட்டுக்கு மதிப்பளிக்கும் சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது. குரோதம் அற்ற, கலாசாரத்தைப் பேணுகின்ற ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதற்குப் பெண்களின் ஆசீர்வாதமும் பங்களிப்பும் மிக அவசியமானது." என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தாய் மற்றும் தாரத்தை நேசிப்பது போலவே தாய்நாட்டையும் நேசிக்க வேண்டும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space