திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக திங்கட்கிழமை பெரும் பதற்றம் நிலவியது.
கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளும் 7 சிவிலியன்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களது விளக்கமறியலை நீடித்து நீதிவான் உத்தரவிட்டதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபர்களைப் பேருந்தை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன்போது சந்தேகநபர் ஒருவரை சிறைச்சாலை அதிகாரி பலவந்தமாகப் பிடித்து பேருந்திற்குள் தள்ளியதாகக் கூறி, அங்கு கூடியிருந்த பிக்குகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நுவான் பெல்லந்துடாக்க, "இந்த அரசாங்கத்திற்குப் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கும் எண்ணம் கிடையாது. ஒரு மாதத்திற்கு மேலாக எவ்வித நேரடிச் சான்றுகளுமின்றி பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் பிக்குகளுக்கு உரிய முறையில் தானம் வழங்கப்படுவதில்லை எனவும், அவர்களது மதச் சடங்குகளைச் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாகவும் சாடினார்.
அங்கு கூடியிருந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிக்குகள், "இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட வர்த்தக நோக்கங்களுக்காகவே இந்தப் புனிதப் பூமி விவகாரம் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றைச் சுயாதீனமாகச் செயற்பட விடாது அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது" எனக் கோஷமிட்டனர்.
தற்போதைய அரசாங்கம் இனவாதத்தைத் தூண்டி, பௌத்த கலாசாரத்தைப் பாதுகாக்க முன்னின்று உழைக்கும் தேரர்களைச் சிறையில் அடைப்பதாகக் குற்றஞ்சாட்டிய போராட்டக்காரர்கள், அரசாங்கத்தின் இச்செயற்பாடு பௌத்த சாசனத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதி எனத் தெரிவித்தனர். இந்தத் திடிர் போராட்டத்தினால் நீதிமன்றச் சூழலில் பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space