தமிழ் மக்களின் வாழ்வில் அறுவடைப்பண்டிகை விழாவாக தைப்பொங்கல் திருநாள் காணப்படுகிறது. அனைவரும் மகிழ்ச்சியுடன் தை மகளை வரவேற்று மகிழ்ந்து, உறவுகளுடன் கூடி மகிழும், நன்றிகள் பகிர்ந்து கொள்ளும் சிறப்பு வாய்ந்த நல்நாளாகும் என இந்துக் குருமார் அமைப்பு பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளது.

இந்துக் குருமார் அமைப்பு மற்றும் அகில இலங்கை இந்து கலாச்சார பேரவையின் தலைவர் "சிவாகமகலாநிதி" . சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் மற்றும் இந்துக் குருமார் அமைப்பின் செயலாளர் சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள் ஆகியோர் இணைந்து அனுப்பி வைத்துள்ள  பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


இலங்கை மணித்திருநாட்டு பல்வேறு இன, பல்சமூக, சமய அமைப்பினை கொண்ட நாடாகும். நாம் ஒவ்வொருவரும் ஏனையவர்களுடைய சமூக, சமய, கலாசார விழுமியங்களையும் தொண்மையையும் அவர்கள் கடைப்பிடித்து முறைமைகளையும் புரிந்து கொண்டு வாழவேண்டும்.

இச்சமயத்தில் தமிழ் மக்கள் பல்வேறு இடர்பாடுகளையும், வழிபாட்டு சுதந்திர மறுப்பு, பூர்வீக பூமி ஆக்கிரமிப்பு என பல துறைகளில் பாதிப்பினை சந்தித்து மன உளைச்சல், மனவேதனையுடன்  வாழும் சூழலில் இருக்கின்றார்கள். இவையெல்லாம் நீங்க வேண்டும் எனும் இறை பிரார்த்தனைக்கு அப்பால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் ஒற்றுமையுடன், ஆக்கபூர்வமான, உணர்வுபூர்வமாக செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் உங்கள் தனித்துவம் பேணி, மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய ஒன்றுபட்டு ஒரேவிதமான செயற்பாட்டினையும் புரிந்திட இணைந்து செயல்பட வேண்டும்.வெளிப்படைத்தன்மையைவெளிப்படுத்த வேண்டும். இவை காணப்படாததும் எமது உரிமைகளை உரியவர்கள் வழங்காமல் தாமதிப்பதற்கு காரணமாகும். ஆகவே அனைவரிடமும் அன்புபாராட்டி கேட்கின்றோம். அனைவரும் ஒன்றுபட்டு ஒரே சிந்தனையுடன் தளராத முயற்சியுடன் நம்பிக்கையுடன் செயற்படுங்கள்.

தொடர்ந்து வரும் காலங்களில் அனைவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும் என அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்து மனமார்ந்த நிறைந்த நல்வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறோம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.