நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மர்ம மரணம்: பிரேத பரிசோதனைக்காக விசேட மருத்துவக் குழு நியமனம்!
Ad Space
Ad Space
மர்மமான முறையில் உயிரிழந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளரின் பிரேத பரிசோதனையை முன்னெடுப்பதற்காக நான்கு சிரேஷ்ட தடயவியல் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த மரணம் தொடர்பான உண்மைகளைக் கண்டறிய நான்கு பேர் கொண்ட விசேட மருத்துவக் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் திறைசேரியின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு கைமாறிய சம்பவம் தொடர்பாக, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் வசிப்பிடத்திற்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்டதுடன், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றதுடன், மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் தற்போது குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space