பதவிய வடக்கு காட்டுப்பகுதியில் வன்னி பாதுகாப்பு படையினர் 2014.04.11 ஆம் திகதி மேற்கொண்ட சோதனையின் போது மூவர் படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்கள். படையினர் தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொண்ட பிரதி தாக்குதலால் இந்த மூவரும் உயிரிழந்தார்கள் என்று நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பான கோப்பு நிறைவுப்படுத்தப்பட்டது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
12 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.2014.04.11 ஆம் திகதியன்று அதிகாலை பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 05 ஆம் இலக்க புங்கல கிராம சேவகர் பிரிவு கம்பிலிவெல வடக்கு காட்டுப் பகுதியில் வன்னி பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது படையினர் தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக எதிர்தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்.இதன்போது மூவர் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து அன்றைய தினமே பதவிய பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் அணிந்திருந்த உடைகள், அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் அவர்களின் இரத்த மாதிரிகள் வழக்கு பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு கெபிதிகொல்லாவ நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அநுராதபுரம் நீதிமன்ற சட்ட வைத்தியர் ஊடாக உடற்கூறு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
படையினர் தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொண்ட பிரதி தாக்குதலால் இந்த மூவரும் உயிரிழந்தார்கள் என்று நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பான கோப்பு நிறைவுப்படுத்தப்பட்டது என்றார்.
பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக் கோப்பு நிறைவு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space