பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பதின் பகுதியில் உள்ள ரகோ கோல்ஹி கிராமத்தில் கைலாஷ் கோலி என்ற இந்து இளைஞர் வசித்து வந்தார்.
ஏழை விவசாயியான இவர், சர்ஃபரஸ் நிசாமணி என்பவரது நிலத்தில் குடிசை வீடு கட்டினார். இதற்காக சர்ஃபரஸ் நிசாமணி, கைலாஷ் கோலியை சுட்டுக் கொன்றார். இவர் இப்பகுதியில் செல்வாக்குமிக்க நில உரிமையாளர்.
இந்த சம்பவத்தை கண்டித்து கைலாஷ் கோலி குடும்பத்தினர் மற்றும் அங்குள்ள இந்துக்கள் அவரது உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்வதாக பதின் நகர போலீஸ் அதிகாரி உறுதியளித்தார். ஆனால் 4 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை.
இதனால் இச்சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தான் சிந்து பகுதியில் மிகப் பெரியளவில் போராட்டம் நடைபெறுகிறது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், ஜமியத் உலமா - இ-இஸ்லாம், பாகிஸ்தான் தெக்ரிக் -இ-இன்சாப் கட்சி, ஜியோ சிந்து மகாஷ், குவாமி அவாமி தெக்ரிக், ஜியோ சிந்து குவாமி மகஷ், அவாமி தெக்ரீக் போன்ற சமூக அமைப்புகளும் பங்கேற்றன.
இதுகுறித்து பாகிஸ்தான் தராவர் இதிகாட் அமைப்பின் தலைவர் சிவா கச்சி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: கைலாஷ் கோலியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி நடைபெறும் போராட்டம் வரலாறு படைத்து வருகிறது. இது போராட்டம் மட்டும் அல்ல. காயமடைந்த மனசாட்சியின் குரல்.
நீதி கோரி நாங்கள் நடத்தும் போராட்டத்தை அடக்க முடியாது. இதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், அப்பாவி குழந்தைகள் தெருவில் அமர்ந்து கைலாஷ் கோலிக்கு நீதி கோரி குரல் எழுப்பினர். ஏழையாக இருந்ததுதான் கைலாஷ் கோலியின் ஒரே குற்றம். ஏழையின் ரத்தம் மலிவானதா? இவ்வாறு சிவா கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இந்து இளைஞர் சுட்டுக் கொலை: சிந்து பகுதியில் அரசியல் கட்சியினர் போராட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space