பிரான்சில் இந்த வார இறுதியில், மீண்டும் கோடை போன்ற வெப்பநிலை நிலவ உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.பிரான்சில், மீண்டும் வெப்பநிலை அதிகரித்து 30 டிகிரி செல்ஷியஸ் வரை எட்டக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.பிரான்சில், கோடையில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவிய நிலையில், வறட்சி தொடர்வதால் மக்களின் அவஸ்தையும் தொடர்கிறது. பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வெப்பமாகவே இருக்கும் என்றும், நாட்டின் வட பகுதியில், மதியம் வெப்பநிலை 21 முதல் 26 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம் என்றும், தென்பகுதியில் வெப்பநிலை 25 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இன்னும் தெற்கு நோக்கிச் சென்றால், கோடைகாலத்தில் இருந்த அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கலாம், அதாவது, 28 முதல் 29 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அதே நேரத்தில், தெற்கு ஆல்ப்ஸ் மற்றும் கோர்சிக்கா பகுதிகளைப் பொருத்தவரை, லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மற்ற பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்தடுத்த நாட்களுக்கும் அதிக வெப்பமே தொடரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக நிலவிய கோடைக்குப் பிறகு, இன்னமும் மழை இல்லாத விடயம் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.