மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலைமை காரணமாக இதுவரை நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

காயமடைந்த நால்வரும் சிகிச்சை பெற்று தற்போது வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. தூதரகங்கள் ஊடாக அவர்களின் நிலைமைகள் குறித்து தொடர்ச்சியாக ஆராயப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான ஈரானின் இராணுவ மோதல்கள் தொடர்ந்தும் நீடித்து வருகின்றன. அண்டை நாடுகளுக்கு இனிமேல் தாக்குதல் நடத்தப்போவதில்லை எனவும், இதுவரை நடத்திய தாக்குதல்களுக்காக மன்னிப்புக் கோருவதாகவும் ஈரான் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இருப்பினும், ஈரானியப் படைகள் தொடர்ந்தும் குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் மீது தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன:

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில், வான் பாதுகாப்பு அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் ஒன்றின் பாகங்கள் வீழ்ந்ததில், பாகிஸ்தான் நாட்டு சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.