இலங்கையின் அந்நியச் செலாவணி ஈட்டும் பிரதான துறையான தேயிலை கைத்தொழில் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் கடல் வழிப் போக்குவரத்துத் தடைகள் என்பன இத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளாதாக இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா ஆகியோர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் கூறுகையில்,
இலங்கையின் கீழ் நாட்டு தேயிலை உற்பத்தியில் 150 மில்லியன் கிலோவுக்கும் அதிகமான அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதில் 10 முதல் 15 வீதமான உயர் ரக தேயிலை ஈரானுக்கு அனுப்பப்படுகின்றது. தற்போதைய போர்ச் சூழல் காரணமாக ஈரான் தேயிலை கொள்வனவை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடல் வழிப் போக்குவரத்துகளிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலைமை தொடருமானால் வாராந்தம் முற்பணத்தைப் பெற்றுக்கொள்ளும் தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாமல் போகும். இலங்கையில் சுமார் ஐந்து இலட்சம் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 வீதமான சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இத்துறை மூலமே வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர். தேயிலை விற்பனை பாதிக்கப்படுவது இவர்களது வாழ்வாதாரத்தை ஒரு நெருக்கடிக்குள் தள்ளும் என்றார்.
மேலும் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா குறிப்பிடுகையில்
மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வான்பரப்பு வான்வழிப் பயணங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளதால் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டு சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் வழிப் போக்குவரத்துகளும் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதால் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடையும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருவதுடன் எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான உலகளாவிய நெருக்கடிகளில் இருந்து இலங்கை போன்ற சிறிய நாடுகள் தப்பிப்பது கடினம். இதனால் 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார சவால்களை முறியடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space