மன்னார் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில், சுமார் 300 கிலோகிராம் எடையைக் கொண்ட அரிய வகை ஆழ்கடல் மீன் ஒன்று திங்கட்கிழமை (14) அதிகாலை சிக்கியுள்ளது.கடற்தொழிலாளர்களால் “கொப்பறா” என அழைக்கப்படும் இம்மீன், ஆழ்கடல் பகுதியில் வாழும் அபூர்வ இனத்தைச் சேர்ந்ததாகும்.நீளமான மூக்குடன், மிக வேகமாக நீந்தக்கூடிய உடலமைப்பைக் கொண்ட இம்மீன், வழக்கமாகப் பிடிக்கப்படும் மீன்களை விட அளவில் மிகப்பரிமாணமாகக் காணப்படுகின்றது.ஆழ்கடலில் மட்டுமே தென்படக்கூடிய இத்தகைய பிரம்மாண்ட மீன் கரைக்கு அருகில் உள்ள பகுதியில் வலையில் சிக்கியது மன்னார் பகுதி மீனவர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே, கரைக்குக் கொண்டுவரப்பட்ட இம்மாபெரும் மீனுடன் மீனவர்கள் ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன.