மலையகத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அந்தஸ்து வழங்குக!
Ad Space
Ad Space
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனைச் சந்திக்கும் போது, மலையகத் தமிழர்களுக்கான விசேட கோரிக்கைகள் அடங்கிய முன்மொழிவுகளை முன்வைக்கவுள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை (19) கொழும்பில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களில் எவரேனும் விரும்பும் பட்சத்தில், அவர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை அந்தஸ்து (OCI) வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தவுள்ளது.
இந்தியத் தூதரகத்தின் கீழ் இயங்கும் இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளையின் (CEWET) நோக்கங்களை விரிவுபடுத்தி, மலையகக் கல்வி வளர்ச்சிக்கான அனைத்து உதவிகளையும் அதன் ஊடாக முன்னெடுக்கக் கோரப்படவுள்ளது. குறிப்பாகப் பின்வரும் திட்டங்கள் முன்மொழியப்படவுள்ளன:
மலையகத்தில் பல்கலைக்கழக வளாகம் ஒன்றை ஸ்தாபித்தல்.
இந்தியாவின் 'நவோதயா' பாடசாலை திட்டத்தின் அடிப்படையில் ஆங்கில மொழி மூல சர்வதேச இந்து பாடசாலைகளை உருவாக்குதல்.
ஆசிரியர் பயிற்சி, தாதியர் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி கலாசாலைகளை நிறுவுதல்.
பாடசாலைகளுக்கான பௌதிக வளங்கள் மற்றும் புலமைப்பரிசில் திட்டங்களை அதிகரித்தல்.
புயல் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும், தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவிகளை அதிகரிப்பதற்கும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
இக்கோரிக்கைகள் ஏற்கனவே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் ஆகியோரிடம் முன்வைக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டிய மனோ கணேசன், அவற்றை மீண்டும் ஒருமுறை துணை ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டார். இச்சந்திப்பில் கூட்டணியின் பிரதித் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
Ad Space
Ad Space