மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானத்தைப் புனரமைத்து அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று திங்கட்கிழமை (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் இன்று காலை 10:30 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கனேடிய உள்ளூராட்சி மன்றச் சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் கனேடிய உள்ளூராட்சி மன்றச் சம்மேளனத்தின் சிரேஷ்ட திட்ட மேலாளர் பி. பிரதீப், திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தனி ராமநாயக்க, மதிப்பீட்டு உத்தியோகத்தர் கோவிந்தராஜ் டில்ஷான், நிகழ்ச்சித் திட்ட அமைப்பாளர் லசிந்து பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக், செயலாளர் எஸ். ராஜவீரன், பிரதேச சபையின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. புஷ்பகுமார, மஸ்கெலியா பொது மருத்துவ அதிகாரி எம்.எச். ஈர்ஷாட், முன்னாள் மருத்துவர் கணேசலிங்கம், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

இந்த அபிவிருத்தித் திட்டத்தின்கீழ், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான பிரத்தியேகப் பாதை, நவீன முறையிலான உடற்பயிற்சி நிலையம், ஆண் மற்றும் பெண்களுக்கான ஆடை மாற்றும் அறைகள் மற்றும் நவீன மலசல கூட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புகள் வடிவமைக்கப்படவுள்ளன.

இப்பணிகள் அனைத்தும் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.