கம்பஹாவில் பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெமுனுமாவத்தை பகுதியில் ஜனவரி 9 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பியகம - கெமுனுமாவத்தை பகுதியில்  ஜனவரி (9) இரவு முச்சக்கரவண்டி சாரதி ஒருவர், தனது வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ள நிலையில், வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிவதை கண்டு வெளியே சென்று பார்த்த போது முகமூடி அணிந்திருந்தவர்களால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படார். ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் மஹர மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.