முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2026 : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
Ad Space
Ad Space
2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்ததாவது, முதலாம் தர மாணவர்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்கான பயிற்சி நூல்கள் (Activity Books) விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் அனைத்து பாடசாலைகளுக்கும் இந்தப் பயிற்சி நூல்களை விநியோகித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய பாடத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள், மாகாண ஆரம்பக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. மேலும் தேவையான கூடுதல் பயிற்சிகளை மே 16ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யுமாறு மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலாம் தவணைக்குரிய பாடப்பரப்புகளை பூர்த்தி செய்ய முடியாத பாடசாலைகள் இருப்பின், அவற்றை இரண்டாம் தவணையில் நிறைவு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதும், நவீன கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவதும் அமைச்சின் முக்கிய இலக்காகும்.
Ad Space
Ad Space