முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.திங்கட்கிழமை (14) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.கடந்த 2012 ஆம் ஆண்டு மோதரை மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்குக் குத்தகைக்கு வழங்கியமை ஊடாக அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கின் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பமானபோது, முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன.மன்றில் முன்வைக்கப்பட்டஇருதரப்பு சாட்ச்சியங்களையும் கருத்தில் கொண்ட நீதிபதி, மேலதிக சாட்சிய விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.