நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவருவதாயின், அதனை முந்தைய திருத்தங்களைப் போல மக்களுக்குத் தெரியாமல் இரகசியமாகவோ அல்லது அவசர அவசரமாகவோ கொண்டுவரக் கூடாது.வெளிப்படைத்தன்மையுடன் மக்களின் பங்களிப்போடு மட்டுமே முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.கொழும்பு நேற்று  வெள்ளிக்கிழமை (12) இளம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்றும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என்றும் வாக்குறுதியளித்த போதிலும், ஆட்சிக்கு வந்த பின்னர் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் அதிகார மோகத்திலிருந்து அவர்களால் விடுபட முடியாமல் போயுள்ளது.தற்போதைய அரசாங்கத்தின் பணிக் காலத்திலும் இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், புதிய அரசியலமைப்பிற்கான முயற்சிகள் எதுவும் பெரியளவில் தெரியவில்லை. ஒருவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமாயின், அது குறித்த உரிமையும் அதிகாரமும் அரசாங்கத்திற்கோ, ஜனாதிபதிக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ மட்டும் உரியதல்ல அது நாட்டின் மக்களுக்குச் சொந்தமானது. எனவே, மக்களின் கருத்துக்களைப் பெற்று வெளிப்படைத்தன்மையுடன் மட்டுமே அது உருவாக்கப்பட வேண்டும்.Executive Branchஇலங்கையின் வரலாற்று நெடுகிலும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்கள் அனைத்தும் குறிப்பிட்ட தனிநபர்களை இலக்காகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. 78ஆம் ஆண்டு அரசியலமைப்பும் ஜே.ஆர். ஜயவர்தனவை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது.தனிநபர்களை மையப்படுத்தி உருவாக்கப்படும் சட்டங்கள், நபர்கள் மாறும்போது தோல்வியடைகின்றன. எனவே, புதிய அரசியலமைப்பு தனிநபர்களைச் சாராமல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மையப்படுத்த வேண்டும்.நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களுக்குமிடையே சரியான அதிகாரச் சமநிலை பேணப்பட வேண்டும். அத்துடன் நீதித்துறை சுயாதீனமாக இருப்பதுடன் நிறுத்தப்படாமல், மக்களுக்கும் சட்டத்திற்கும் பொறுப்புக்கூறக் கூடியதாகவும் மாற்றப்பட வேண்டும்.நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் எல்லைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, நீதிமன்றத் தீர்ப்புகள் மீதான நியாயமான விமர்சனங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். மேலும், தென்னாப்பிரிக்காவைப் போலப் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளும் அடிப்படை உரிமைகளாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்.நாட்டின் மக்கள் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைவரை தேடிச் செல்வதை நிறுத்த வேண்டும். தனிநபர்கள் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.2022 ஆம் ஆண்டு வலியுறுத்தப்பட்ட முறைமை மாற்றம் என்பது தனிநபர்களை மாற்றுவது அல்ல மாறாக நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை, பொலிஸ் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்ற அரச நிறுவனங்களை வலுப்படுத்துவதே ஆகும் என்றார்.